Skip to main content

பஸ் மோதி பெண்கள் உயிரிழப்பு; ஆறுதல் கூட சொல்ல வராத எம்.எல்.ஏ

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

MLA Kadhar Basha Muthuramalingam did not even come condole with family women

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சதக் பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நேற்று விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த அம்மாவும் மகளும் (குப்பம்மாள், பார்வதி) பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவிரைவு பேருந்தும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை ஏற்றி வந்த மினி லாரியும் நேருக்கு நேராக கடுமையாக மோதியது. இதில் அதி விரைவு பேருந்து கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை உடைத்து உள்ளே உள்ள மரங்களை எல்லாம் உடைத்து தள்ளி நின்றது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த ஏழு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

இது பற்றி கீழக்கரை மீனவ சங்கத் தலைவர் முனியசாமி கூறியதாவது:- குப்பம்மாள் கணவர் கடந்த வருடம் விபத்தில் இறந்துவிட்டார் அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அதேபோல் கடந்த வருடம் பார்வதியம்மாள் அவர்களது மகனும் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களையும் இவர்களது குடும்பத்தினர் தான் வைத்து பராமரித்துள்ளனர்.

 

MLA Kadhar Basha Muthuramalingam did not even come condole with family women

 

இந்நிலையில் தாயும் மகளும் விபத்தில் இறந்துள்ள நிலையில், இந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அளிக்கவில்லை என்றால் முதல்வர் வரும்போது பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து உடனடியாக கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும் மீனவர் சங்கத்தினரைச் சேர்ந்தவர்கள் பேசியபோது தி.மு.க.வைச் சேர்ந்த மலைச்சாமி மற்றும் உதயகுமார் ஆகியோர், இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் இப்போதைக்கு பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

 

மேலும் முதல்வர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிறைய செலவு செய்துள்ளதாகவும் அவரிடம் போதுமான பணம் இல்லாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அதற்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள், எங்களுக்கு அவர் தரும் பணம் தேவையில்லை. ஆறுதல் கூட சொல்ல வரக்கூடாதா? எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றார்கள் கனத்த குரலில். மேலும் முதல்வர் வரும்போது தாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்