
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் 1,000 ஆவது குடமுழுக்கு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணமான அமைச்சர் சேகரையும், அதிகாரிகளையும் அலுவலர்களையும் பாராட்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.