தி இந்து குழுமத்தின் சார்பில் வெளியாகியுள்ள ஓர் மனிதன் ஓர் இயக்கம், மாபெரும் தமிழ் கனவு, தெற்கிலிருந்து ஓரு சூரியன் ஆகிய புத்தகங்களின் திறனாய்வு செப்டம்பர் 8 ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது ழ புத்தகக்கூடு அமைப்பு. இதில் பத்திரிக்கையாளர் ஆழி.செந்தில்நாதன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் இருவரும் கலந்துக்கொண்டு புத்தகம் குறித்து பேசவிருந்தனர். இதுப்பற்றி அந்த மண்டபத்தின் உரிமையாளரிடம் அனைத்தையும் கூறியே அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திடீரென செப்டம்பர் 3ந்தேதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து, இந்த நிகழ்ச்சிக்கு மண்டபம் தரமுடியாது எனச்சொல்லியுள்ளார். காரணம் கேட்டபோது, அவர் சரியாக பதில் தரவில்லையாம். நீண்டநேரம் வலியுறுத்தியும் அவர் மறுத்துவிட்டதோடு, அதற்கான காரணத்தையும் சொல்லாததால் இவர்களும் சரியென ஒப்புக்கொண்டு திரும்பியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு தகவல் கூறி, நிகழ்ச்சி உடனே நடத்த முடியாது, வேறு தேதியில் நடத்தலாம் என்று நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். இந்த தகவல் சில பத்திரிக்கையாளர்கள் மூலமாக திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டது. பாஜகவின் உத்தரவை அடிமையரசு ஏற்று கருத்து சுதந்திரத்தை நசுக்குவது சரியல்ல என அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். அதோடு, இந்த விவகாரத்தை விசாரியுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின், திருவண்ணாமலை வடக்கு மா.செ சிவானந்தத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார். உடனடியாக அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளரை அழைத்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து திமுக மா.செ சிவானந்தம் தலைமையில் அதே தேதியில், அதே மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தமிழக ஆளும்கட்சியான அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. காவி இந்துத்துவா முகத்தினை தொடர்ச்சியாக கிழிப்பவர் ஆழி.செந்தில்நாதன், பாஜக மோடி அரசால் இந்தியாவின் பொருளாதாரம் எந்தளவு சரிந்துள்ளது என்பது தொடர்பாக தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவருபவர் ஜெயரஞ்சன். இவர்கள் வந்து பேசினால் நடுநிலையாளர்கள் தங்கள் மீது வெறுப்பை காட்டுவார்கள் என நினைத்தனர் பாஜக மற்றும் அதிமுகவினர்.
பெரியளவில் கவனம் பெறாமல் இருந்த நிகழ்ச்சியை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தை ஆளும் அதிமுக மூலமாக தடை செய்ய வைத்தார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்த அதிகார துஷ்பிரயோகம், கருத்துரிமை பாதிப்பு திமுக தலைவரின் கவனத்துக்கு சென்று அறிக்கை வெளியிட்டார். அதேபோல் வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க பாஜக மற்றும் அதிமுக மேல்மட்டத்தை அதிரவைத்துள்ளது.