விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இங்கு அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்த வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்து, தற்போது அவர்கள் கம்பி எண்ணுகின்றனர்.
உரிய மருத்துவ சோதனை மேற்கொள்ளாமல் அவசரகதியில் மேற்கண்ட ஐவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் – அந்த 5 பேரில் ஒருவரான கணேசன், எச்.ஐ.வி. தொற்றுள்ளவர் என்றும் அவரது மனைவி நிறைமதியும்கூட எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
2019 மார்ச் மாதமே, கணேசனுக்கும் நிறைமதிக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் மருத்துவ உதவிகளைச் செய்துள்ளது. ஆனாலும், இவ்விருவரையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அம்மையம் தவறிவிட்டது. இதைத் தனக்கு சாதமாக்கிக்கொண்ட கணேசன், சிறுமிகளை வேட்டையாடியிருக்கிறான்.
கணேசனின் இக்கொடுஞ்செயலுக்கு எய்ட்ஸ் குறித்த தவறான நம்பிக்கையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகள், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில், எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அது என்னவென்றால், கன்னித்தன்மை உள்ள இளம் பெண்களிடம், சிறுமியரிடமும் உறவு வைத்துக்கொண்டால், எய்ட்ஸ் குணமாகிவிடும் என்பதே. அதனால்தான், ‘மருந்து, மாத்திரைகள் சரிப்பட்டு வராது.. உயிர் வாழவேண்டுமென்றால் சிறுமிகளோடு பழகவேண்டும்..’ என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறான், கணேசன்.
எய்ட்ஸ் கணேசனுக்கு மட்டும்தானா? என்று சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவனுடன் சிறையில் இருக்கும், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலுள்ள திருவனும் இரணியவீரனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த கணேசன், எய்ட்ஸ் குறித்த தவறான புரிதலால் அந்தப் பகுதியில், மேலும் எத்தனை சிறுவர்களிடம் நெருங்கினானோ? இது குறித்தெல்லாம் உடனே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே, எச்.ஐ.வி. ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தில், சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. தற்போது, கணேசன் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இனியாவது, விழித்துக்கொள்ளுமா விருதுநகர் மாவட்டம்?