புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா ஊரடங்கு காலத்திலிருந்து இரண்டு முறை கரோனா நிவாரணம் என்ற பெயரில் தலா ரூ 1000 மதிப்புள்ள உணவுப் பொருட்களை தொகுதி முழுவதும் வழங்கினார். சில நாட்களுக்கு முன்பு கட்சி பிரமுகர்களின் குடும்பங்களை கணக்கிட்டு ஒரு பூத்துக்கு சுமார் 70 குடும்பங்களுக்கு வேட்டி, சேலை என உடைகளை வழங்கினார்.
இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் "நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்" என்ற பெயரில் வெண்கல பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருளை நேற்று முதல் விராலிமலைத் தொகுதியில் வழங்க தொடங்கியுள்ளார். சுமார் ரூ. 1000 மதப்புள்ள இந்த சீர் தொகுதி முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இவையெல்லாம் தேர்தல் ஜூரத்தால் வாரி வழங்குவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று விராலிமலையில் செய்தியாளர்கள் சந்திப்பு என்று அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அரசுத் துறை அலுலர்கள் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களை பலமுறை தொடர்பு கொண்டு அழைத்திருந்தனர். ஒரு சில ஊடக செய்தியாளர்கள் தாமதமாக வரும் வரை பிரஸ் மீட் நிறுத்தி வைக்கப்பட்டு அனைத்து மைக்குகளும் வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்த்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து அமர்ந்தார்.
வரிசையாக அனைத்து ஊடக மைக்குகளையும்பார்த்தவர், எல்லாரும் தான் தமிழ்நாடு முழுக்க கொடுக்குறாங்க ஓரவஞ்சனையா செய்தி போடக்கூடாது என்று சொல்லிக் கொண்டே சன் டி.வி. மைக்கை எடுத்திருங்க என்று சொல்லி மைக்கை தூக்கி போட்டவர், திமுக கட்சியில எல்லாரும் கொடுக்கிறதையும் போடனும்ல என்று சொன்னார். சன் டிவி மைக் அங்கிருந்து எடுத்த பிறகே பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தால் பத்திரிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ''புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது.
ஊடகங்களை மிரட்டுவதும் - அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்.
மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்! அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!'' என்று பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.