பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து தவறான வாசகம் இடம்பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த வாசகத்தை நீக்குவதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், இந்து மதம், முஸ்லிம் மதம் குறித்த தலைப்பில் சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் சந்திரசேகர் தொடுத்த வழக்கை நீதிபதி ஆதிகேசவலு விசாரித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும், இனி வரும் காலங்களில் இதுபோன்று இடம்பெறாது என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒப்புக்கொண்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசின் பதிலை மனுவாகத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை 22- ஆம் தேதி ஒத்திவைத்தார்.