தரமில்லாத கட்டிட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 6 ந் தேதி இன்று சமூகநலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி. அந்தியூர் செல்வராஜ் எம்.பி, ஆகியோர் முன்னிலை வைத்தனர். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பயனளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதன் பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈரோடு மாவட்டத்தில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் உதவி தொகை பெறுவதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு அந்தந்த பகுதிகளில் கொடுக்கப்படும். அனைத்து துறைகளிலும் மக்கள் பயன்பெறும் வகையில் என்னென்ன திட்டங்கள் உள்ளதோ அதனை வழங்க முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 821 பேருக்கு 133 கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள்,தாளவாடியில் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன வாய்க்கால் பிரச்சனையை இருதரப்பு விவசாயிகளிடமும் பேசி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவித்தொகை கொடுத்ததில் தவறு இருந்தால் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் ஆய்வு செய்து வருகிறார். தகுதியானவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அரசு கட்டுமான பணிகளில் தரத்தை உறுதி செய்வது குறித்து உரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமில்லாத கட்டுமான பணிகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மாடல் காலாவதி ஆகி விட்டது என்று கவர்னர் கூறியது குறித்து அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டபோது, “மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்திய பின்னரே திராவிட மாடல் கருத்து காலாவதியாகும்” என்றார். நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் ,துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.