திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் ரெட்டியார்சத்திரத்தில் சுமார் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமியின் சீரிய ஏற்பாட்டால் சுமார் ரூ.98 கோடி மதிப்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவர திட்டமிட்ட அமைச்சர் பெரியசாமி கன்னிவாடி செல்லும் சாலையில் சுமார் ரூ.13 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட ஏற்பாடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெட்டியார்சத்திரம் பகுதியில் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் பெரியசாமி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்ட வரும் இடத்திற்கு வந்து கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டிட பணிகள் தரமாக கட்ட வேண்டும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிட்டோரியம் மற்றும் ஹாஸ்டல் வசதிகளுக்கான மதிப்பீடுகளை செய்யச் சொல்லியும் உத்தரவிட்டார். ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளன. இதற்காக மாணவர்கள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமிக்கு மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது... வரம் கொடுக்கும் தெய்வம் போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டவுடனே ஆத்தூர் தொகுதியில் இரண்டு கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். ஆத்தூர் ஒன்றியத்தில் ரூ.98 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அதிநவீன ஆய்வகங்களுடன் கூடிய கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தமிழக முதல்வரின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் ரெட்டியார்சத்திரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த அரசு கலைக் கல்லூரியும் திறந்து வைக்கப்படும் என்றார். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கேட்ட உடனே ரெட்டியார் சத்திரத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியை தந்தார். அவர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் கேட்ட உடனே கிராமப்புற மாணவர்களின் கல்வி தரம் உயர ஆத்தூரிலும், ரெட்டியார் சத்திரத்திலும் இரண்டு கல்லூரியை கொடுதுள்ளார். முதல்வரை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்” என்று கூறினார்.