Skip to main content

ஜெ.,வின் மாஜி டிரைவரின் மனைவிக்கு மிரட்டல்; கனகராஜின் அண்ணன் கைது!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

 

former chief minister jayalalithaa former car driver brother police arrested



மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மனைவியை மிரட்டிய வழக்கில், அவருடைய மற்றொரு அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

 

ஜெ., மறைவை அடுத்து, அவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்த அஸைன்மெண்டை முன்னின்று நடத்தியது, ஜெ.,யின் முன்னாள் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையைப் பெற்றவருமான சமுத்திரம் கனகராஜ்தான் என சந்தேகிக்கப்பட்டது. 

 

அவர் மீது விசாரணை திரும்பிய நிலையில், கடந்த 28.4.2017ம் தேதி இரவு 08.30 மணியளவில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி பிரிவு சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

 

உயிரிழந்த கனகராஜின் செல்போன் மற்றும் அவர் தொடர்புடைய சில ஆவண ஆதாரங்களை திட்டமிட்டு மறைத்து விட்டதாக அவருடைய உடன் பிறந்த அண்ணன் தனபால், சின்னம்மா மகன் ரமேஷ் ஆகியோரை கடந்த 2021- ஆம் ஆண்டு குன்னூர் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் இருவரும் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் (வயது 44), ஜலகண்டாபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கனகராஜின் மனைவி கலைவாணி (வயது 28). குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தன் கணவருக்கு சில சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பதற்காக கலைவாணி வந்திருந்தபோது, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

 

''நீ கொடுத்த புகாரால்தான் என்னுடைய அண்ணன் தனபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கு செலவுக்காக இதுவரை 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். நீ புகாரை வாபஸ் பெறாவிட்டால் இங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியாது,'' என மிரட்டியிருக்கிறார் பழனிவேல். அங்கிருந்து செல்ல முயன்றபோது, கலைவாணியின் உடைகளைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். 

 

இதனால் அரண்டு போன கலைவாணி, இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பழனிவேல் மீது மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டியது, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜூன் 28ம் தேதி கைது செய்துள்ளனர். மேட்டூர் நீதிமன்றத்தில் பழனிவேலை ஆஜர்படுத்திய காவல்துறை, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

 

கலைவாணியை மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம் ஜூன் 3- ஆம் தேதியே நடந்துள்ளது. ஆனால் பழனிவேல் மீது ஜூன் 27- ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு, மறுநாள் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''கலைவாணி, அளித்த புகாரின் பேரில் தான் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் ஏதுமில்லை,'' என்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்