திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஜி.டி.என். கல்லூரியில் 52வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் துரை முன்னிலை வகித்தார். இந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 681 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கல்வி என்பது மாணவ, மாணவிகளுக்கு முக்கியம். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்ற சிந்தனையில் நாம் படிக்கிறோம். அது போல் படித்து முடித்துவிட்டு உடனே அரசு வேலைக்கு போக வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதுபோல் தனிப்பட்ட தொழிலை செய்யலாம் என்று கூட இருப்பார்கள்.
இந்த கல்லூரியில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சட்டக்கல்லூரி கூட அடுத்த ஆண்டு வரவிருக்கிறது. அதுபோல் Ph.d. படிக்கக்கூடிய ஆராய்ச்சி மாணவர்கள் கூட இங்கு வந்து படித்துவிட்டு போகிறார்கள். அந்த அளவுக்கு கல்லூரியின் தரம் உயர்ந்திருக்கிறது.
கூட்டுறவுத் துறை மூலம் கொடைக்கானலில் அடுத்த ஆண்டு ஆராய்ச்சி கல்லூரி தொடங்க இருக்கிறது. கூட்டுறவுத்துறை மூலம் நிதி பட்ஜெட் போடும் அளவுக்கு கேரளாவில் வங்கிகளில் பல லட்சம் கோடிகள் இருக்கு. அந்த அளவுக்கு கூட்டுறவுத் துறை வளர்ந்துள்ளது. அது போல் தமிழகமும் சிறந்த மாநிலமாக உருவாகும். இந்த கல்லூரி தாளாளர் ரத்தினம் கட்டுப்பாட்டுக்கு வந்ததிலிருந்து கல்லூரி தரமும் உயர்ந்து இருக்கிறது. சானிட்டரி இன்ஸ்பெக்டர் வேலைக்கு மாணவ மாணவிகள் படிக்க வேண்டுமென்றால் காந்தி கிராமத்தில் தான் போய்படிக்க வேண்டும். நான் கூட 150 மாணவர்களை சேர்த்து விட்டு, அவர்கள் தற்போது வேலைக்கும் சேர்ந்துவிட்டார்கள். அப்படி உடனே வேலைக்கு போகக்கூடிய சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பு கூட இந்த கல்லூரியில் இருப்பதால் மாணவ மாணவிகள் படித்த உடன் அரசு வேலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது. படித்தவுடன் வேலைக்கு செல்லக்கூடிய நர்சிங் கோர்ஸ் இங்கே இருக்கிறது. இப்படி அனைத்து துறைகளுக்கும் போகக் கூடிய படிப்புகளும் இக்கல்லூரியில் இருக்கிறது.
ஒன்றே ஒன்று, தனியார் மருத்துவக்கல்லூரி மட்டும்தான் இல்லை. அதையும் கொண்டு வரவேண்டும் என்றுதான் தாளாளர் ரத்தினம் நினைக்கிறார். ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு கட்டுப்பாடு தான் முக்கியம். அது இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மூலம் தெரிகிறது. அந்த அளவுக்கு நல்ல மாணவர்களை உருவாக்கக்கூடிய கல்லூரியாக இந்த ஜி.டி.என் கல்லூரி திகழ்ந்துவருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எந்த ஒரு செல்வமும் நிலையானது இல்லை. ஒருவருக்கு பொன், பொருள் அழிந்தாலும் கூட கல்வி தான் நிலையாக கடைசி வரைக்கும் இருக்கும். அதனால், மாணவ-மாணவிகளுக்கு கல்வி தான் முக்கியம். மாணவ, மாணவிகள் புத்தகத்தை மட்டும் படிக்காமல் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்தாலே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறலாம். அனைத்து இடங்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இன்னும் இக்கல்லூரி உயர வேண்டும்” என்று கூறினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரத்தினம் மகனும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான வெங்கடேஷ், மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, ஜெயன். சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.