நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு சில பதவிகளைப் போட்டியிடப் பிரித்துக்கொடுத்து பட்டியல் வெளியிட்டார்.
ஆனால் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று கலைஞர் சொல்லுவார். அந்தக் கட்டுப்பாட்டைச் சிலர் காற்றில் பறக்கப்பட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் திமுக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐயப்பன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 2004ம் வருடத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் உடன்பிறப்பு ஒருவர். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். 2004ல் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தது. அப்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 23 பேர் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்த ஆலோசனையின்போது 23 பேரும் கடலூர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த கணேசன் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கணேசனை அழைத்துப் பேசினார். அப்போது கணேசன், ''நான் இதே பதவியில் (பஞ்சாயத்துத் தலைவர்) இருந்துட்டு போறேன். அந்த 23 பேர்ல யாரை வேண்டுமானாலும் நிப்பாட்டுங்க. நீங்க யாரை நிறுத்தினாலும் உழைக்கிறேன். திமுக வெற்றிக்கு பாடுபடுறேன்னு'' சொல்லியிருக்கிறார்.
அதற்கு கலைஞர், நீதான் போட்டியிடனும் எனச் சொல்ல, கணேசன் சற்று தயக்கத்துடன், எனக்கு இந்தப் பதவியே போதும்னே, வேற யாரையாவது நிக்க வையுங்க, நான் கடுமையா பாடுபடுவேன், கட்சிக்காக உழைப்பேனென்று சொல்ல, கலைஞரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி சொல்றேன்யா நீதான் வேட்பாளர், நீதான் நிக்கணும், அதனால பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய் என்று சொல்கிறார்.
உடனே பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கணேசன், இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இடைத்தேர்தல் பணிகளைக் கவனிக்க மு.க.ஸ்டாலினை நியமிக்கிறார் கலைஞர். மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு, 23 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருக்கும் கணேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன் என்றார் கலைஞர். 2004 இடைத்தேர்தலில் கணேசன் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற கணேசன் வேறுயாருமில்லை, தற்போது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று தமிழக அமைச்சராக உள்ள சி.வி.கணேசன் தான் அவர்.
அப்போது கடலூர் மாவட்டத்தில் திமுக தலைமை சொல்வதைக் கேட்டு கட்டுக்கோப்பாக இருந்த உடன்பிறப்புக்கள், இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கோஷ்டியாகச் செயல்பட்டுள்ளது திமுக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நமக்கு என்ன செய்தது என்பதைவிட, கட்சிக்காகக் கட்சியின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்தோம் என்பதை இப்போதுள்ள உடன்பிறப்புகள் நினைக்க வேண்டும் என்கின்றார்கள் மூத்த உடன்பிறப்புக்கள்.