Skip to main content

"மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்!" -மத்திய அரசுக்கு அன்புமணி அவசரக் கடிதம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

anbumani ramadoss

 

மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு அன்புமணி அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

                   
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 27 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைத்துள்ளது மத்திய சுகாதாரத் துறை. அதனைச் சுட்டிக்காட்டியும் அநீதியைச் சரி செய்ய வலியுறுத்தியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார் பாமக  இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி இராமதாஸ்.   
 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டிலேயே  27 சதவீத  இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும்,  அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், ‘’முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத  இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 
 

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதைச் சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் சமூக நீதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், போராடிப் பெற்ற பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அர்த்தமற்றுப் போய்விடுமோ? என்ற அச்சமும், கவலையும் தான் எனக்குள் வருகிறது. 
 

2020-21 ஆம் மருத்துவக் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக 9,550 இடங்கள்  சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் (Directorate General of Health Services - DGHS) நடத்திய கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் பட்டியலினத்தவருக்கு 1,385 (14.50%) இடங்களும், பழங்குடியினருக்கு 669 (7.00%) இடங்களும் கிடைத்துள்ளன. பட்டியலினம், பழங்குடியினருக்கு அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் இந்த எண்ணிக்கை அமைந்திருக்கிறது. 
 

மீதமுள்ள இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 7,125 இடங்கள் அதாவது 74.60% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கான இடங்களில்  653 (7.00%) இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர்த்த 371 இடங்கள், அதாவது 3.8% இடங்கள் மட்டும் தான்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்துள்ளது.
 

தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences), வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி(Vardhman Mahavir Medical College -VMMC), லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி (Lady Hardinge Medical College), பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ. முதுநிலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ESI Post Graduate Institute of Medical Science and Research) போன்ற  மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தான் இந்த இடங்களாவது பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ளன.
 

அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத  இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தால், முதற்கட்டமாக நிரப்பப்பட்ட 9,550 இடங்களில் 2,579 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால்,  மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பெறப்பட்ட இடங்களுக்குப் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆனால், மாநில அரசு கல்வி நிறுவனங்களிடமிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பெறப்பட்ட இடங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் கொள்கை நிலைப்பாடு நியாயமானதல்ல.
 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
 

ஒருவேளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன்மூலமே உண்மையான சமூகநீதியை உறுதிப்படுத்த முடியும். 
 

http://onelink.to/nknapp

 

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 24 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் 1,758 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத, அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50 சதவீத இடங்கள், அதாவது  440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஓர் இடம் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப் படவில்லை. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 
 

 

உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதைச் செயல்படுத்த வேண்டியதும், அதன் அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியதும் மத்திய அரசின் கடமை. 
 

அதுமட்டுமின்றி, நடப்புக் கல்வியாண்டிலேயே மருத்துவ மேற்படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளையும், தேவைப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்‘’ என மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.