தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கியும், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வுசெய்தும்வருகிறார்கள். அந்த வகையில், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சிவி. கணேசன் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுவருகிறார். அவர் தொகுதியில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உபரி நீரை திறந்துவிட்டனர். இதனால் தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதையடுத்து, வெலிங்டன் ஏரிக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களையும் பார்வையிட்டார். உபரி நீர் செல்லும் ஓடை அருகே உள்ள புலிவலம் கிராமத்து தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். அடுத்து நாவலூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்த அமைச்சர், அங்கிருந்த பள்ளிக்கூடம் சிதிலமடைந்திருந்ததைப் பார்வையிட்டார்.
அதற்கான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து நாவலூர் சாத்தநத்தம் இடையே செல்லும் ஓடையில் ஏற்கனவே உள்ள தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரிடம் விவரித்தனர். இதையடுத்து அந்த தரைப்பாலத்தில் தண்ணீரில் இறங்கி பார்வையிட்ட அமைச்சர், விரைவில் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அடுத்து, திட்டகுடி நகராட்சிப் பகுதியில் பார்வையிட்ட அமைச்சர், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார். அடுத்து பண்ருட்டி நகரில் மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்மணி ஜெய்பூன்பி வீட்டுக்கு அமைச்சர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் ஆகியோர் சென்றனர். மேலும், இறந்துபோன அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தனர்.