திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் நேற்று (16.06.2024) மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (16-06-2024) பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மனோகரன் என்பவர் மகன் சதீஷ்குமார் (வயது 34) பலத்த தீக்காயங்களுடன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.