
கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த வேண்டும். அதுவரை கோயில் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்திய இளைஞர்கள் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி வைரத்தேரோட்டம் தீர்த்த திருவிழா என்று சுமார் 10 நாட்கள் வரை நடப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகில் உள்ள குளத்தில் இருந்து திடீரென நீர் ஊற்று வெளிவந்தால் சுற்றவட்டார கிராம மக்கள் அந்த தண்ணீரை புனித நீராக நினைத்து எடுத்து சென்றனர். அதன் பிறகு நடந்த திருவிழாவின் போது ஒரு தரப்பினர் வழக்கம் போல முத்துமாரியம்மன் கோயில் திருவிழா என்று துண்டறிக்கை வழங்கினார்கள். மற்றொரு தரப்பினர் நீரூற்று முத்துமாரியம்மன் என்று பெயர் வைத்து பதாகைகள் வைத்தால் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சணையால் கடந்த 4 ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி வரை நடந்த நிலையில் மீண்டும் திருவிழா நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு திருவிழா நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்திருந்த நிலையில் மீண்டும் சில காரணங்களால் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மாங்காடு கிராம இளைஞர்கள் கடந்த 23 ந் தேதி வழக்கமான முறைப்படி திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை கோயில் வளாகத்தில் திரண்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கோயில் திருவிழா நடத்த வேண்டும் என்று கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வழக்கமாக எந்த முறையில் திருவிழா நடந்ததோ அந்த முறையில் மீண்டும் திருவிழா நடத்த வேண்டும். இந்த பிரச்சனையை தீர்க்க தாணான்மை நாட்டு கோயில் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்த முடிவு எடுக்க வேண்டும். திருவிழா நடத்தப்படும் வரை கோயில் திருமண மண்டபத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். சம்பவ இடத்திற்கு வந்த வடகாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் திங்கள் கிழமை மாலை இது சம்மந்தமாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் உள்ளது. அங்கு பேசி முடிவு செய்யலாம் என்று கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.