கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர், சங்கர், ரவி ஆகிய மூவரும் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 38 நபர்களிடம், சுமார் 29 லட்சம் ரூபாய் பணமோசடி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மேற்படி மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் மோசடி செய்த அந்த நிறுவனத்திற்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதில் சம்பந்தப்பட்ட சேகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 58 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தீர்ப்பை வரவேற்று உள்ளனர்.