தனக்கு எதிரானவர்களை ஒடுக்க சி.பி.ஐ.யை வைத்துக்கொண்டு செயல்படும் மத்திய அரசிற்கு எதிராக, ஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.:
"சிபிஐ அமைப்புக்கு எதிராகவும், ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திவரும் தர்ணா போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பாஜகவின் ஏமாற்று வேலைகளையும், மக்கள் விரோத செயல்களையும் வெட்டவெளிச்சமாக எதிர்க்கும் மம்தா பானர்ஜிக்கு எதிராக சி.பி.ஐ.யை ஏவிவிட்டு முதலமைச்சருக்குத் தெரியாமல் அம்மாநில உயர் காவல் அதிகாரிகளைக் கைது செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மம்தாவின் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத மத்திய பாஜக, சி.பி.ஐ மூலம் மேற்கு வங்கத்தில் பிரச்சினைகளை கிளப்பி கொல்லைப்புறமாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முயல்கிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு மத்திய மாநில கூட்டாட்சி தத்துவத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. மேற்குவங்கத்தில் மத்திய பாஜக கிளப்பி வரும் பிரச்சினைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதும், அதனை மீறுவதுமாகும். மேற்குவங்க மாநிலத்தின் சுயாட்சியைக் காக்கும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை எழுப்புவோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறைகளின் மூலம் வழக்குப் பதிவுசெய்து அவர்களின் எதிர்ப்புக் குரலை நெறிக்கும் செயலை மத்திய பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது." என்கின்றது அந்த அறிக்கை.