Skip to main content

"கலவரத்தைத் தூண்டுவோரை கைது செய்க"- கமல்ஹாசன் வலியுறுத்தல்! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

makkal needhi maiam party president kamal haasan statement today

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். இத்தகு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய அபாயம் மிக்கவை. 

 

மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க. ரசிகர்கள் அல்லர். ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது. வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம். மிருக குணம் கொண்டோர் எவராயினும் அவர்கள் நாட்டில் திரிய வேண்டியவர்கள் அல்ல. 

 

நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம். 

 

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம், ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்