திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா, சொத்து வரி, மின் இணைப்பு வரை லஞ்சம். அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 லஞ்சம் பெறுகின்றனர்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, கட்சித் தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி என்ற கேள்விக்கு, "உடல் நலம்தான் முக்கியம். உடல் நலம் சரியான பின் ரஜினி தனது கட்சிப் பணிகளைத் தொடங்குவார். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; ஜனவரியில் அறிவிப்பு வெளியாகும். நாங்கள் மூன்றாவது அணியாக உருவாகி விட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையில் மூன்றாவது அணியாக உருவாக வாய்ப்புள்ளது. ஒரு வேளை மூன்றாவது அணித் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு நான்தான் முதல்வர்" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற இரண்டு பக்கங்களைக் கொண்டப் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.