தமிழக டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜுன் 12 அன்று நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அதில் மக்கள் அதிகாரம் அமைப்பும் பங்கேற்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் அதிகாரம் அமைப்பு.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை சுமார் 5000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு பா.ஜ.க. மோடி அரசும், அதிமுக எடப்பாடி அரசும் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அனுமதியளித்துள்ளன. போராடுபவர்களை பல வகைகளில் அச்சுறுத்தி ஒடுக்க முயல்கிறன. ஏழாயிரம் அடிவரை நிலத்தடி நீரை வெளியேற்றி கோடிக்கணக்கான லிட்டர் நீரில் பல்வேறு ரசாயணங்களை கலந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி நிலக்கறி படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப்பாறைகளிலிருந்து ஷேல்கேசையும் நீரியில் விரிசல் முறையில் வெளியே பிரித்து எடுக்கப்போகிறார்கள்.
இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவே பாலைவனமாகும். கடல் மீன்வளம் அழியும். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அழியும். நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும். எதிர்காலத்தில் காவிரிப்படுகை மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறும். இப்போது போராடி தடுத்து நிறுத்தாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையினர் மோசமான அழிவில் தள்ளப்படுவார்கள். இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகிற 12-6-2019 புதன் கிழமை மாலை 5-30 மணிமுதல் 6-00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும் என கோருகிறோம்." என தெரிவித்துள்ளனர்.