"அரசியல் கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகளிடம், ஆதீன சொத்துகள் பல சிக்கியுள்ளன. கோயில் நிலங்களுக்கு முறையாக குத்தகைய அளக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகத் தான் பிறப்பார்கள்" என்றும் சாபம் விட்டபடி பேசியுள்ளார் மதுரை ஆதீனம்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி கோயில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். சிறப்பு பெற்ற தலத்திற்கு, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்று முதன்முறையாக கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு ஊர் எல்லையில் ஊர் பொது மக்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து, தாரை தப்பட்டை முழங்க அரசியல்வாதிகளை மிஞ்சிடும்வகையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோயில் வாசலில், கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், பிரளயம் காத்த விநாயகர், சாட்சிநாதசுவாமி மற்றும் கரும்படு சொல்லியம்மை ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாவாமி தரிசனம் செய்தார். அவரை பார்க்க ஊர் மக்கள் பலர் கோயில் உள்ளே வர முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை கோயில் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், "கோயில்களின் கும்பாபிஷேகங்கள் தாமதமாவதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான். ஆதீன நிலங்கள் பல ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ளன. அதற்கான குத்தகை முறையாக செலுத்தாததுடன், பல இடங்களில், ஆதீன நிலங்களை விற்பனையும் செய்து மோசடி செய்துள்ளனர். இதற்கு சரியான சட்டத்திட்டங்கள் இல்லாததே காரணம். கோயில் நிலங்களுக்கு முறையாக குத்தகைய அளக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகத் தான் பிறப்பார்கள்.
இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்கிற ரீதியில் செயல்படுகிறார்கள். அரசியலும், சினிமாவும் அவர்களை பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ்மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மாக் செல்கிறார்கள். இதனை தடுக்க அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்வதை இன்றைய இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும். நம் நாட்டிலேயே கல்வி கற்க வேண்டும். சுயதொழில்கள் பல புரிய முன்வரவேண்டும்.
பெரும்பான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க, போதுமான உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. ஆனால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிறைய உதவிகளும், சலுகைகளும் வழங்கப்படுகிறது. தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றிய புண்ணிய பூமி. தமிழர்களுக்கு கெடுதல் மற்றும் துரோகம் செய்பவர்கள் அதற்கான பலா பலன்களை கண்டிப்பாக அடைந்தே தீருவார்கள். ஒருகாலத்தில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுடன் கைகோர்த்திருந்தவர்கள் தான்,முந்திய மத்திய அரசான ராஜீவ்காந்தி குடும்பம். உக்ரேனில் இருந்து தமிழர்களை மீட்பதில், தமிழக அரசும், மத்திய அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
நான் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆதீன கோயில்களை முறையாக பூஜைகள் நடக்கவும், கோயிலுக்குரிய நிலங்கள், சொத்துக்கள் முறையாக பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். கோயில் கும்பாபிஷேகங்களை தமிழில் செய்வதில் தவறில்லை. இன்றைய அர்ச்சகர்கள் பலர் வெற்றிலை பாக்கு தரித்துக் கொண்டும், சகல விதமான கெட்டப்பழக்கங்களுடனும் உள்ளனர். சுவாமியை தொட்டு பூஜிக்கும் அவர்கள், சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியதே. ஓதுவார்கள் இல்லாத கோயிலில்களில் ஓதுவார்களை நியமிக்கும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.