மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல், துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டு மிரட்டியதாக 5 பேரை, மதுரை மாவட்ட போலீஸார்(29-08-2019) கைது செய்துள்ளனர். இதில் முக்கியமான ரவுடி தனசேகரன், ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவன். ஆனால், இன்னமும் அவன் ஆக்டிவாக இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக எண்ணூர் தனசேகரன், திருச்சி சசிக்குமார், சென்னை வியாசர்பாடி ஹரி கண்ணன், கார்த்திக், வேலூரை சேர்ந்த ராஜா ஆகிய 6 பேரும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் பணம் செலுத்த மறுத்ததால், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென சசிக்குமார் துப்பாக்கியை எடுத்து மிரட்டியதோடு, வானை நோக்கி சுட்டதாக தெரிகிறது. இதனால், அங்கிருந்த பொதுமக்களும், சுங்கச் சாவடி ஊழியர்களும் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதில் சசிக்குமார் மட்டும் சிக்கி விட மற்ற 5 பேரும் காரில் தப்பியோடிவிட்டனர்.
இதனிடையே, மதுரை மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்திடவே, கோட்டையூர் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்பி செல்லும்போது, வாலாந்தூர் என்ற இடத்தில் 5 பேரையும் போலீஸார் மடக்கினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தான், அவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.மணிவண்ணன், "கைது செய்யப்பட்ட வேலூர் ராஜா மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், எண்ணூர் தனசேகரன் மீதும் பல வழக்குகள் இருக்கிறது. இவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதுதொடர்பாக நாம் சென்னை காக்கி நண்பர்களிடம் விசாரித்த வகையில், எண்ணூர் தனசேகரன் ஏற்கனவே பலமுறை சிறைக்கு சென்றவன். அவன்மீது எண்ணூர் அனல்மின் நிலைய ஒப்பந்ததார் ஜேம்ஸ் பான்ட் கொலை உள்பட 7 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி உள்ளிட்ட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவன் சிறையில் இருந்து வெளிவருவதை தடுக்க 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டான். கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். அப்போது, கை, கால்களில் "மாவுக்கட்டு" போடப்பட்டு தான் சிறைக்கு அனுப்ப பட்டான். ஆனால், ஓராண்டுக்குள் வெளியே வந்ததுடன், நீதிமன்றத்திற்கே துப்பாகியுடன் சென்றுவிட்டு திரும்பும்போது சிக்கியிருக்கான்.
அப்படியெனில் போலீஸார் வெளியிடும் "மாவுக்கட்டு" புகைப்படங்களின் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நபர், ஓராண்டிற்குள் வெளியே நடமாடுவதும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது.