காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், டெல்டா மாவட்டத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் திட்டமிட்டு, பாலைவனமாக்கி எரிவாயு எடுக்க திட்டமிடும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணியில், ஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் நடைபெற்றது.
புதன்கிழமை அன்று மாலை பேராவூரணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சித்திரவேலு முன்னிலை வகித்தார். சிபிஐ நிர்வாகி ராஜமாணிக்கம், பி.ஏ.கருப்பையா, காங்கிரஸ் கட்சி குருவிக்கரம்பை சம்பத், பெரியார் அம்பேத்கர் கழக மாவட்ட செயலாளர் அனல் ச.ரவீந்திரன், முருகானந்தம், தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் குழு உறுப்பினர் மா.ந.விடுதலை மறவன், மதுக்கூர் நகரச்செயலாளர் பு.கோபி, பவனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க டெல்டாவை அழிக்காதே" "உழவு நடக்கும் டெல்டாவில் எழவு நடக்க வைக்காதே" "காவிரி எங்கள் பிறப்புரிமை.... எவருக்கும் இல்லை காப்புரிமை" "காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு" என முழக்கங்களை எழுப்பியவாறு, ஏர்க்கலப்பை பிரச்சார பயணம் அண்ணாசிலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.