சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி ஒருவர் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "காணாமல் போன 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி நாள்தோறும் ஆட்கொணர்வு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர். சிறுவர் மற்றும் சிறுமிகளை காதலித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது சிறுமிகள் கருவுற்று இருப்பதும் தெரிய வருகிறது. இது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இதனை தடுத்திடும் வகையில் காவல்துறையில் நிலையாகவும் நிரந்தரமாகவும் செயல்படும் வகையில் அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் மாவட்டந்தோறும் உள்ள மனித மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இத்தடுப்பு பிரிவினர் சிறுமிகள் காணாமல் போனதாக வரும் புகார்களை விரைவாகவும் விரிவாகவும் விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களது விருப்பத்திற்கு சிறுமிகளிடம் ஆசையைத் தூண்டி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத போது சிறுமிகளின் வாழ்க்கை பறிபோவதை தடுக்க முடியாது. எனவே மனித மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு எத்தனை இடங்களில் செயல்படுகிறது; ஆண்டுக்கு எத்தனை வழக்குகளை கையாண்டுள்ளனர்; எத்தனை காவலர்கள் தற்போது பணியில் உள்ளனர்; எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இதற்கென தனி அரசாணைகள் உள்ளதா என்பது குறித்த விபரங்களை போதுமான ஆவணங்கள் மற்றும் புள்ளி விபரத்துடன் காவல் தலைமை இயக்குநர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணையை வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.