டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டீர்கள். ஆயிரம் காரணங்களைக் கூறுகிறீர்கள். போலியான மற்றும் கள்ள மது பானங்கள் வரவிடாமல் தடுக்க அரசு கவனமாக இருப்போம் என்று கூறியுள்ளீர்கள். கடந்த ஆண்டு அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாகப் போலி மது விற்பனை மற்றும் கள்ள வருமானம் ஈட்டப்படுவது குறித்து வழக்கு தொடர்ந்து அதன் விளைவாக ரசீது வழங்கப்பட வேண்டுமென்றும் விலைப் பட்டியல் பதாகை வைக்கப்பட வேண்டுமென்றும் பல நிபந்தனைகளை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் வழங்கியது.
அதனில் எதையுமே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் பின்பற்றவில்லை. நீதி மன்றத்திற்கு அரசு நடத்தும் நிறுவனமே மதிப்பு கொடுக்கவில்லை என்றால் நாட்டில் எப்படி சட்ட ஒழுங்கு கடைபிடிக்கபடும்? POS (Point of sale) முறையில் வியாபாரம் நடைபெற்றால்தான் போலி மதுவை வரவிடாமல் தடுக்க முடியும். நீதிமன்றம் வலியுறுத்தியும் திருந்தாத நிர்வாகமாக்கத்தான் டாஸ்மாக் நடை பெற்று வருகிறது.
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வழி தேடுவதுதான் நல்ல அரசிற்கு அடையாளமே தவிர குடி நோயாளிகளைப் பராமரிப்பது அல்ல. கள்ளச்சாராயம் தயாரிக்கபடுவதை தடை செய்ய முடியவில்லை அதனால்தான் நாங்கள் டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறோம் என்பது அரசு இயந்திரத்தின் இயலாமையைக் குறிக்கிறது. காவல் துறையினரை இழிவு படுத்துவதாக உள்ளது. வருங்கால சந்ததியினர் இதே போன்று மதுவிற்கு அடிமையானால் நாட்டின் வளர்ச்சி கேள்வி குறியாகிவிடும். நீதிமன்ற ஆணையை மதிக்காமல் இயங்கும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாகக் கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.