
அண்மையில் தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த முறை பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும். அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையானது ஐந்தாயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி பொங்கல் பரிசுடன் சேர்ந்து கரும்பையும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கக் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து உயர்நீதிமன்றம் ஜனவரி 2 ஆம் தேதி திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.