
லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (04.01.2021) திருச்சியில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லோக் ஜனசக்தி கட்சியினுடைய மாவட்டத் தலைவர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லோக் ஜனசக்தியின் மாநிலத் தலைவர் வித்தியாதரன் கூறுகையில், ''மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்த மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் திருவுருவப்படத்தை வருகின்ற ஜனவரி 24-ஆம் தேதி சென்னையில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான கூட்டத்தில் திறந்துவைத்து, மறைந்த சமூக நீதிப் போராளி சந்திரசேகரனுடைய பெயரில் மலர் வெளியிட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றாமல் பல லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்பட நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் ஆக்கப்படுவதால் இடஒதுக்கீடு மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது. எனவே தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தக் கட்சி ஏற்கிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி தலைநகரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, விவசாயிகளிடையே அமைதி ஏற்படும் வகையில் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.