தமிழகம் முழுவதும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 29 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே தபால் வாக்கு பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும். அப்படி ஒரு ஏற்பாட்டினை இந்த உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் செய்யவில்லை.
இதுகுறித்து நாம் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் 70 முதல் 80 சதவிதம் வரை திமுக கூட்டணிக்கே பதிவாகியிருந்தது. ஆளும்கட்சியாக இருந்தும் நம்மால் அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்க முடியவில்லையே என ஆளும்கட்சியான அதிமுக அரசு ஊழியர்கள் மீது அதிருப்தியில் உள்ளது.
அதன்வெளிப்பாட்டை இந்த உள்ளாட்சி தேர்தலில் காட்டுகிறது. ஆளும் கட்சியான அதிமுக அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளை அளித்தால் அவர்கள் எப்படியும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள். அதனால் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் அளிக்காதபடி செய்யுங்கள் என மேலிடத்தில் இருந்து உத்தரவு மாவட்ட ஆட்சியர்களுக்கு வந்து இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29367 வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டிசம்பர் 15 மற்றும் 22 ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் வகுப்புகள் நடைபெற்றன. வழக்கமாக இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும்போது ஊழியர்களுக்கு தபால் வாக்குக்கான படிவம் மற்றும் வாக்குச்சீட்டு வழங்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 22ந்தேதி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என வகுப்பில் கலந்துக்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருக்கும் வழங்கவில்லை. வாக்குசீட்டு அச்சடிக்கவில்லை என காரணம் சொல்லியுள்ளார்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகள். இதனால் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.