மயிலாடுதுறையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுகவினருக்குள் போட்டி ஏற்பட்டு இருவர் போட்டியிட்டு சமமான வாக்குகளைப்பெற்றதால் மறு தேர்தல் நடந்தது. அதில் அதிமுகவினர் அளிக்கும் வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என்கிற நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் இருவர் வாக்களித்து திமுகவில் போட்டி வேட்பாளராக போட்டியிட்ட காமாட்சிமூர்த்தியை வெற்றி பெற செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் 27 ஒன்றிய கவுன்சிலர்களை கொண்டது. அதில் திமுக 17 காங்கிரஸ், பாமக தலா 1, அதிமுக 5, சுயேச்சை 3. இந்த நிலையில் இன்று நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாளின் மனைவி ஷீமதியும், தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தியின் மனைவி காமாட்சியும் போட்டியிட்டனர். இருவரும் தலா 12 வாக்குகளை பெற்றிருந்தனர்.
அதிமுகவின் 3 கவுன்சிலர்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் மறு தேர்தல் நடைபெற்றது. மறுதேர்தலில் அதிமுக ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் வாக்களிக்காமல் வெளியில் வந்துவிட்டார். மீதமுள்ள இரண்டு அதிமுக கவுன்சிலர்களும் திமுக போட்டி வேட்பாளராக போட்டியிட்ட காமாட்சிமூர்த்திக்கு வாக்களித்தனர். அதன்படி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தியின் மனைவி காமாட்சிமூர்த்தி 14 வாக்குகள் பெற்று தலைவரானார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீமதி 12 வாக்குகளைப் பெற்றார்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் ஒருவர் கூறுகையில்," திமுகவின் சார்பில் அதிகம் செலவு செய்து அதிக கவுன்சிலர்களை வெற்றிபெற செய்தவர் இளையபெருமாள், அதனால் பெரும்பான்மையான வாக்குகள் இளையபெருமாளின் மனைவி ஸ்ரீமதிக்கு இருந்தது. ஆனால் பாமக, அதிமுக, சுயேட்சைகள் என பலரும் சமுதாய அடிப்படையில் மூவலூர் மூர்த்தி என் மனைவி காமாட்சி வாக்களித்ததால் சமமானது. மீதமுள்ள மூன்று பேரில் சந்தோஷ்குமாரும் மூவலூர் மூர்த்திக்கு நெருக்கமானவர் என்பதால் சமுதாய உணர்வோடு இரண்டு கவுன்சிலர்களிடம் சிக்னலை கொடுத்துவிட்டு அவர் வாக்களிக்காமல் வெளியேறியதால் மூர்த்தியின் மனைவி வெற்றி பெற்றிருக்கிறார்" என்கிறார்.