உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் அமோக வெற்றியை பெற்று வருகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வெற்றியை அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கெமிக்கல் கழிவை சோப்பு நுரை என கண்டுபிடித்த நவீன விஞ்ஞானியான அமைச்சர் கருப்பணனின் சொந்த ஊர் பவானி. இந்த பவானியை ஒட்டி உள்ள ஊராட்சி தான் காடையாம்பட்டி என்கிற ஆண்டி குளம் ஊராட்சி. இந்த ஊர் பவானியை மையமாகக் கொண்டுள்ளது. இங்குதான் அமைச்சர் கருப்பணன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த ஆண்டி குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கு அமைச்சர் கருப்பணன் மஞ்சுளா என்பவரை நிறுத்தியிருந்தார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த ஊராட்சி ஒதுக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திருமதி பத்மா விசுவநாதன் என்பவர் களமிறங்கினார். தேர்தலின்போது அமைச்சர் கருப்பணன் ஒரு கம்யூனிஸ்ட்காரன் நம்மை எதிர்த்து நிற்பதா என கடுமையாக பிரச்சாரம் செய்ததோடு ஓட்டுக்கு தாராளமாக வைட்டமின் "சி" கொடுத்து தனது வேட்பாளர் மஞ்சுளாவை வெற்றி பெற எவ்வளவோ பாடுபட்டார்.
ஆனால் பொதுமக்களாகிய வாக்காளர்கள் இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் அமைச்சர் கருப்பணனுக்கு பலத்த அடியை கொடுத்து சுமார் 500 வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பத்மா விஸ்வநாதனை மிகப்பெரிய வெற்றி பெற வைத்தார்கள். இதனால் ஆண்டி குளம் ஊராட்சியில் உள்ள அதிமுகவினர் அமைச்சர் கருப்பணன்யை 'பரிதாபம் அமைச்சரே' என கிண்டலடித்து வருகிறார்கள்.