பட்டுக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவரது மகன் சந்தோஷ்ராஜா (வயது 17) . இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். பள்ளியில் ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி, பள்ளியின் இயற்பியல் பாட ஆசிரியர் ராஜா என்பவர் பெற்றோரை அழைத்து வருமாறு திங்கள் கிழமை மதியம் பள்ளியை விட்டு வெளியில் அனுப்பி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவர் சந்தோஷ்ராஜா பெரியகோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி முன்பு அதிராம்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர் பள்ளிக்குள் நுழைந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். ஆசிரியர் ராஜா தலைமறைவாகி விட்டார். பள்ளி முதல்வர் ராம்தாஸ் செல்லையாவை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
- பகத்சிங்