Skip to main content

கந்தலாகிப் போன வாழ்க்கை! காற்று வாங்கும் பேருந்துகள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

மனிதரின் வாழ்க்கையை கொடூரமாக்கிய கரோனா தொற்றின் விளைவாய், தற்போது தொற்றுப் பரவல் வீரியமெடுத்த நிலையில், 5ம் கட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களுக்கான பொது பேருந்து போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.


மாநிலத்தை 8 மண்டலமாக பிரித்ததில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்குள் பயணிப்பவர்களுக்கு இ-வே-பாஸ் தேவையில்லை. மண்டலம் விட்டு வேறு மண்டலம் பயணிப்பு என்றால் இ-வே-பாஸ் அவசியம்.

பேருந்தில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பேருந்துகளில் மூவர் சீட்டில் இருவருக்கும், இருவர் சீட்டில் ஒருவருக்கும் மட்டுமே அமர அனுமதி. மொத்தத்தில் ஒரு பேருந்தில் 30-36 பேருக்கு மேல் அனுமதி இல்லை. மேலும் மண்டலத்தில் 50 சதவிகித பேருந்துகளே இயக்கப்படும் என்கிறது அறிவிப்பு. 5ம் கட்டமான ஜூன் முதல் தேதியன்று காலை முதல் பொதுப் போக்குவரத்து நெல்லை மண்டலத்தில் துவக்கப்பட்டாலும், பேருந்தில் பயணம் செய்கிற பயணிகளின் கூட்டமில்லை.

 

 


தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் கிராம புறங்களுக்கு காலை நேரத்தில், பிற சமயங்களில் இயங்கிய பேருந்துகள் போதிய பயணிகளின்றி எம்.டி.ட்ரிப்புகள் அடிக்கப்படுகின்றன. கிராமங்களின் நிலை இப்படி எனில், நகரங்களிலும் அதே பிரச்சனைதான் நெல்லை, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலும் பேருந்துகள் போதிய பயணிகளின்றி சொற்ப அளவிலான பயணிகளுடனேயே கிளம்புகின்றன. இரண்டு மாதத்திற்கும் மேல் வேலையில்லாமல் வருமானமின்றி வாழ்க்கையே கந்தலாகிப் போய்விட்டது. பஸ் ஏற கையில் பணமில்லை. வெளியூர்களில் சிறு சிறு தொழில்கள் முடக்கத்தால் வேலையுமில்லாத நிலையில் பேருந்தில் ஏற எங்கே வழியிருக்கிறது என்கிற மனநிலை கிராமப் புறங்களில் நிலவுகிறது.

தொலை தூரப் பேருந்துகள் கிடையாது. தென் மாவட்டங்களிலிருக்கும் வியாபார நிறுவனங்களுக்கான கொள்முதல் சென்டர் மதுரை மற்றும் திருச்சியான வடமாவட்டங்களே. சிறிய வியாபாரிகள் தொட்டு பெரிய வியாபாரிகள் வரை அங்கே வியாபார நிமித்தம் சென்று வந்தால்தான் வியாபாரம் நடக்கும். மதுரை மற்றும் பிற பகுதி செல்ல வேண்டுமானால் இ-வே-பாஸ் வேண்டுமாம். பிறகு எப்படி வியாபாரம் ஓடும். இந்த மண்டலத்திற்குள்ளேயே பயணிப்பதால், குறிப்பாகப் பணப் புழக்கம் கொண்ட வியாபாரம் சாத்தியமில்லை. அதே சமயம் நாகர்கோவிலிலிருந்து திருச்சி வரையில் இரயில் இயக்கப்படுகிறது. மண்டலம்விட்டு மண்டலம் செல்கிற ரயில் போக்குவரத்து வசதியை போன்று பேருந்து வசதியுமிருந்தாலேயொழிய முடங்கிப் போன வியாபாரம் மெல்ல மெல்ல எழுந்திருக்கும் என்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார பிரிவை சேர்ந்தவர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.