மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று முன்தினம் (02.04.2024) இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று (03.04.2024) விடுமுறை அளித்திருந்தார்.
இத்தகைய சூழலில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று (04.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டிருந்தார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறையின் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.