மழைக்காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த மழையினால், நேற்று இரவு 10:30 மணியளவில் அங்கிருந்த தடுப்பு சுவரின் கீழ் உள்ள மணி திட்டாக இருந்த இடத்தில் தீடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு, அருகில் உள்ள ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் மீது விழுந்தது. இதில் ஏற்பட்ட சத்தத்தினால், பதற்றமடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது மண் சரிவு, ஜெயலட்சுமி மீது விழுந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இந்த சம்பவ குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஜெயலட்சுமியை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். மேலும், வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் ரவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, இந்த பகுதியில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று தீயணைப்பு துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.