Skip to main content

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு! -வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
Chennai High Court



வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து,  தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில்,  வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். 


சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.


கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என, அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.


சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், இருவரும் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி 7-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தங்களை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரமும் அவருடைய மனைவி ஸ்ரீநிதியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கை  ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 

 


 

சார்ந்த செய்திகள்