Skip to main content

அதிக வட்டி, தங்கம் எல்லாம் பழசு! வீட்டுமனை மோசடி புதுசு! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Land Fraudulent in chidambaram

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்ஜம் நகர், யூனுஸ் நகர், சித்தி நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு மனை விற்பதாகவும், அதற்கு முன் பணம் ஏதும் தேவையில்லை, குலுக்கல் முறையில் மாதம் இரண்டாயிரம் முதல் ஐந்து ஆயிரம் வரை கட்டினால் போதும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 

அதனை நம்பி சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 40 முதல் 50 தவணையாகப் பல கோடி ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர். கட்டியவர்களுக்கு இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை. மேலும் கட்டிய பணத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோதும், சரியான பதில் இல்லை. வேதனை அடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அணுகி பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

 

அதனடிப்படையில் செவ்வாய் கிழமையன்று  பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் பணத்தைக் கட்டி ஏமாற்றமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

 

இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கப் புகார் அளிப்பது என்றும் சரியான நடவடிக்கை இல்லை என்றால் பணம் கட்டி ஏமாந்த அனைத்து பொதுமக்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளனர். 


பரங்கிப்பேட்டை பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை தருகிறோம் என்ற பெயரில் பலகோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்