இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை நிறுவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி குறித்த ஆய்வு திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கைக்கோள் ஏவுதலை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO - டிட்கோ) விண்வெளி தொடர்பான முயற்சிகளில் மாநிலத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU - எம்.ஓ.யு.) கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து டிட்கோ சார்பில் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. இது உலக முதலீட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி துறையில் பங்கேற்க வைக்கும் முயற்சி ஆகும். இந்த பூங்கா விண்வெளி ஆராய்ச்சி, அதன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். இது உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகத்தின் நிலையை மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.