நெடுவாசல் வடக்கு கிராமத்தில் வெள்ளையப்பன் கோயில் காட்டில் நின்ற ஆலமரங்களில் ஒரு லட்சம் வௌவால்கள் இருந்தது. ஆனால் கஜா புயலுக்கு பிறகு மரங்கள் உடைந்து நாசமானதால் சில ஆயிரம் வௌவால்களே மொட்டை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமத்தில் அப்பகுதி மக்களின் வழிபாட்டு தளமாக உள்ள வெள்ளையப்பன் கோயில் காட்டில் பல ஆலமரங்கள் விழுதுபரப்பி பல ஏக்கர் பரபரப்பளவில் நிற்கிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு கிடா வெட்டி பூஜை போட்டு விருந்து படையல் நடத்துவது வழக்கம். அப்போதுகூட அங்கு ஆலமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களுக்கு சிக்கல் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள் கிராமத்து மக்கள். யாரும் அந்தப் பக்கம் வௌவால்களை வேட்டையாடி சென்றுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பகுதி இளைஞர்கள் கண்காணித்தும் வந்தனர். இதனால் வெடிகள் கூட வெடிப்பத்தில்லை அந்த பகுதியில்.
இந்த நிலையில் கஜா புயல் தாக்கிய வேகத்தில் வெள்ளையப்பன் கோயில் காட்டையும் புரட்டிப் போட்டது. ஆலமரம், அரசமரங்களின் கிளைகள் உடைந்து நாசமானது. பல்வேறு இடங்களுக்கும் இறைதேடிச் சென்ற வௌவால்கள் வந்து அடையும் அதிகாலை நேரத்தில் பலமான காற்று வீசியதால் காற்றின் வேகம் தாங்காமல் பல ஆயிரம் வௌவால்கள் இறந்தும் பறந்தும் போனது. எஞ்சிய கொஞம் வௌவால்கள் மட்டுமே மொட்டையாய் நிற்கும் நிழல் இல்லாத மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வழியாக வந்த செல்லக்கண்ணு என்ற மூதாட்டி கூறும் போது.. இந்த வெள்ளையப்பன் கோயில் எல்லைக்குள்ள யாரும் வேட்டையாட முடியாது. அதனாலதான் லட்சம் லட்சமா வௌவால்கள் வளர்ந்தது. இரவில் இறைதேடி போகும் வௌவால்கள் அதிகாலை 3 மணி முதல் வரத் தொடங்கும். அந்த சத்தம் கேட்டுதான் நாங்க விவசாய வேலைக்கு கிளம்புவோம். புயல் வந்த அன்றும் அப்படித்தான் இறைதேடிச் சென்ற வௌவால்களின் சத்தம் எங்களுக்கு கேட்காமலே போய்விட்டது. விடிந்து பார்த்தால் ஒட்டு மொத்த மரமும் உடைஞ்சு தொங்குது. அதுல கொஞ்சம் வௌவால்கள் தொங்குது. இந்த வௌவால்களும் இறை கிடைக்காமல் தவிக்கிது. இதுக்கு முன்னால வாழை, பலா, கொய்யா என்று பல பழங்களும் கிடைத்தது. இப்ப ஒட்டு மொத்த மரங்களும் அழிஞ்சதால வவ்வால்களுக்கு இறை கிடைக்கல என்றார்.