
மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு ஆதீனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள் நேற்று (07/05/2022) சந்தித்துப் பேசினர்.
இன்று (08/05/2022) மயிலாடுதுறை குத்தாலத்தில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம், "மீண்டும் இந்த பட்டணப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு பிறப்பித்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான, உத்தரவு கடிதத்தையும் தருமபுரம் ஆதீனத்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் 'பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் தமிழக அரசு 'ஆன்மீக' அரசு என மெய்ப்பித்துள்ளது'' என தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளது. பட்டணப் பிரவேசம் போன்ற இந்து சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் தமிழக அரசை 'ஆன்மிக அரசு' எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.