
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (64). இவரது மனைவி சின்னாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருட்டிப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கடந்த 25 வருடங்களாகக் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ராமன் பால் சொசைட்டியில் பால் ஊற்றிவிட்டு பிறகு மீண்டும் இருட்டிப்பாளையம் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாகக் காட்டு யானை ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமன் தப்பிச் செல்ல முயன்றபோது, அந்த யானை அவரைத் தூக்கி வீசியதில் ராமன் அருகில் உள்ள பாறையின் மேல் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராமன் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடம்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சாதிக் பாஷா விசாரணை செய்து வருகிறார்.