மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலே அதன் நிர்வாகம் உள்துறை அமைச்சகத்திடம் வந்துவிடும். அப்படியெனில் மத்தியில் உள்துறை அமைச்சராக இருப்பவர்தான், அந்த மாநிலத்தின் ஆட்சி, நிர்வாகத்தை நடத்துபவராக இருப்பார்.
ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இல்லை. அங்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எல்லை பாதுகாப்புபடை, பிரிவினைவாத குழுக்கள், இந்தியாவின் எல்லை நிலையில் நடக்கும் போர் என பல பிரச்சனைகள் உள்ளது.
அதையும் தாண்டி மக்களுக்கான நலத்திட்டங்கள் அங்கு உருவாகும் பல புதிய பிரச்சனைகள், தேவையான அடிப்படை வசதிகள், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் இப்படி மேலும் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திடீரென ஏற்படுகிற பயங்கரவாதப் பிரச்சனை என எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு அங்குள்ள அரசியல் நகர்வுகளையும் கண்கானிப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த ஒட்டுமொத்த பொறுப்பும் ஜம்மு காஷ்மீரை வழிநடத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்ளது. இந்தப் பின்னணியில்தான் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு ஆலோசகராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு அவரின் பொறுப்பு ஜம்மு காஷ்மீரை நிர்வகிப்பது என அறிவிக்கப்பட்டது. எனவே விஜயகுமார் ஜம்மு காஷ்மீரின் அறிவிக்கப்படாத ஒரு முதல்வராக, தனது ஆளுமைகளை செலுத்தப் போகிறார்.
மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்ததால் அவர் இந்த தேர்வில் வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குட்லிஸ்ட்டிலும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.