Skip to main content

’கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை’ - முதல் நாள் விசாரணையில் டிடிவி தரப்பு வாதம்

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
mla

 

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  வழக்கின் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் முதல் நாள் விசாரணை 
 இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில்  தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப்பி.எஸ்.ராமன், அரசு மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், பேரவை சபாநாயகர், பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கொறடா ராஜேந்திரன் தரப்பில் முகுல் ரோஹ்தகி ஆகியோர் ஆஜராக  வாதாடினர் . 


தகுதிநீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏ-க்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ப்பி.எஸ்.ராமன்:

சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எங்களுடன் சேர்ந்து ஆளுநர் மனு கொடுத்த ஜக்கையனுக்கு ஒரு முடிவு, எங்களுக்கு ஒரு முடிவு என சபாநாயகர் எடுத்துள்ளார். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

 

தலைமை நீதிபதி அமர்வின் மாறுப்பட்ட தீர்ப்பில் உள்ள மாறுபட்ட கருத்துக்களில் மட்டுமே மூன்றாவது நீதிபதி முடிவெடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன்னிலையில் முறையாக தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

திமுகவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டோம் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நாங்கள் மார்ச் மாதம்  கொடுத்த புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஆனால் எங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொறடா அளித்த புகாரில் அவசர கதியில் உத்தரவிட்டிருப்பதே உள்நோக்கத்தை நிரூபிக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களித்து விடுவோம் என  தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என நீதிமன்றத்திலேயே தெரிவித்தோம். ஆளுநரிடம் கடிதம் கொடுத்தபோது அதிமுக ஒன்றே இல்லை. தனித்தனி அணியாகத்தான் இருந்தார்கள். அப்போதைய சூழலில் அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  

 

எந்த ஒரு  எம்.எல்.ஏ.-வும் மக்களுக்கு பணியாற்றத்தான் விரும்புவார்களே தவிர பதவியை தியாகம் செய்ய விரும்ப மாட்டார்கள். கட்சியை பிளவுபடுத்திய பன்னீர்செல்வம் அணியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. ஆனால் நாங்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையிலேயே எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதிலிருந்தே சபாநாயகர் பாரபட்சமாக செயல்பட்டார் என்பது தெரிகிறது.

பன்னீர் செல்வத்திற்கு எதிராக நாங்கள் அளித்த புகாரில் நோட்டீஸ் அனுப்பி இருந்தால் கூட ஆளுனரை சந்திப்பதை நாங்கள் தவிர்த்திருப்போம். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான், ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களில் முதல் குற்றச்சாட்டாகும். நாங்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக கட்சிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கொறடாவோ, முதலமைச்சரோ எங்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு வைக்கவில்லை. சபாநாயகர் மட்டும் தான் அப்படி கூறி வருகிறார்.

 

திமுக உடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்வது சபாநாயகர் மட்டும் தான். நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளிலேயே திமுகவும் சந்தித்ததற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்கள் மீதான புகாரில் முதல்வரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்கள் தரப்பு வாதத்தையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தகுதி நீக்க முடிவெடுக்கும்போது முதல்வர் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதனடிப்படையிலேயே எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சிக்குள் பிரச்சினையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று கூறுவது சரிதான், ஆனால் நாங்கள் முதல்வரிடம் மற்றும் சபாநாயகரிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்ற பொழுது அவர்கள் செவிசாய்க்க  மறுத்துவிட்டார்கள் " என வாதத்தை முன் வைத்தார். 

 

இதையடுத்து வழக்கு நாளை விசாரணை  ஜூலை 24க்கு  ஒத்திவைக்கபட்டது. 

சார்ந்த செய்திகள்