மனம் விரும்பி தமிழனை காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாக ஆணவமாகக் கடத்திக் கொண்டு சென்ற குஜராத்தை சேர்ந்த நவீன் பட்டேலை வாய்ப்பிருந்தும் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு திணறிக் கொண்டிருக்கும் தென்காசி போலீசாரின் செயல்பாடுகள் தென்மாவட்டத்தைச் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டாகுளம் ஏரியாவைச் சேர்ந்த மாரியப்பன் தம்பதியர் சவுதியில் சாப்ட்வேர் பணியிலிருந்தவர்கள். அந்த தம்பதியருக்குப் பிறந்த இரண்டு மகன்களில் இளையவர் வினித். சகோதரர்கள் ஆரம்பத்தில் சவுதியில் பயின்றாலும் பின்னர் குடும்பச்சூழல் காரணமாக பெற்றோருடன் நாடு திரும்பியவர்கள், தங்களின் பூர்வீகமான கொட்டாகுளத்தில் வசித்து வந்திருக்கிறார்கள். ஊரில் விவசாயம் செய்யுமளவுக்கு சொல்லும்படியான நிலபுலன்கள், தம்பதியர் வெளிநாட்டு சாப்ட்வேர் பணியில் சம்பாதித்தவை என ஆரோக்கியமான வசதி வாய்ப்புகளைக் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.
சவுதியிலிருந்து திரும்பியதும் வினித் தனது படிப்பை செங்கோட்டை பகுதியிலுள்ள மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்திருக்கிறார். வினித் பதினோராம் வகுப்பு வந்தபோது, அதே வகுப்பில் கிருத்திகா என்ற மாணவியும் பயில, இவர்களுக்குள் அப்போதே ஈர்ப்பாகி மனமொத்துப்போய் விரும்பியிருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியிலிருந்து வந்த நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல் தம்பதியர் இதே பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருபவர்கள். அவர்களின் மூன்று மகள்களில் மூத்த மகள் கிருத்திகா வினித்துடன் பாசமாகவே பழகியிருக்கிறார். மெட்ரிக் பள்ளி படிப்பை முடித்த வினித், சென்னையில் மேற்படிப்பிற்குப் பின், சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியிலிருந்திருக்கிறார்.
அதே நேரம் பள்ளி படிப்பிற்குப் பின் கோவையில் பட்டப்படிப்பு முடித்த கிருத்திகா டிப்ளமோ படிப்பிற்காக சென்னை வந்த போதும் வினித் கிருத்திகாவின் காதல் வளர்ந்திருக்கிறது. ஆறு வருடமாக மனமொத்துக் காதலித்து வந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படிப்பு முடித்து கிருத்திகா ஊர் திரும்ப, அதே சமயம் சென்னை சாப்ட்வேர் பணியிலிருந்த வினித், தன் சொந்த ஊர் வந்து வீட்டிலிருந்தபடியே ஐ.டி. பணியைத் தொடந்திருக்கிறார். ஆறு வருடங்களுக்குப் பின்பும் வினித், கிருத்திகாவின் நேசமும் காதலும் ஆழமாகவே வளர்ந்திருக்கிறது. அடிக்கடி சந்திப்பும் நடந்திருக்கிறது.
இந்நிலையில், இவர்கள் காதலைப் பற்றியறிந்த வினித்தின் பெற்றோர் ஆரம்பத்தில் அதிருப்தியடைய, பின்பு, மகனின் விருப்பமே மகிழ்ச்சி என்ற கணக்கில் அவர்கள் மனதை மாற்றிக் கொண்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதே வேளையில், வினித்தின் குடும்பம் நவீன்பட்டேலின் குடும்பத்தைக் காட்டிலும் வசதியில் கூடியதாகவே இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், தன் மகள் கிருத்திகாவின் காதல் விஷயம் நவீன்பட்டேலுக்குத் தெரியவர ஆத்திரமான நவீன்பட்டேல் நேராக வினித்தின் தந்தை மாரியப்பனிடம் சென்று, “நீங்க வேற, நாங்க குஜராத் பட்டேல் உயர் சாதி. ரெண்டுக்கும் சரிப்படாது” என்று கோபமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறாராம். சம்பவத்திற்குப் பின்பு கடந்த அக்டோபரில் கிருத்திகாவின் வீட்டிற்குச் சென்ற வினித், அவரது பெற்றோரிடம் தங்களின் 6 வருடக் காதலைக் கூறியவர், பெண் கேட்டிருக்கிறார். அதே வேளையில், வினித்தை மறக்க மாட்டேன் என தன் மகள் பிடிவாதத்துடன் இருப்பதையறிந்து ஆத்திரமான தந்தை நவீன் பட்டேலும், “நீ தமிழன், கீழானவன். நாங்க பட்டேல் உயர் சாதி ரெண்டுக்கும் ஒத்துவராது. எம்பொண்ண, எங்க பையன் மைத்ரிக் பட்டேலுக்குப் பூ வைக்கப் போறோம்” என்று வினித்தைத் தாக்கப் பாய்ந்திருக்கிறாராம். இதனால் பயந்துபோன வினித் ஒரு வழியாகத் தப்பித்து வீடு வந்திருக்கிறாராம்.
தன் பெற்றோர் தன்னை தன் உறவினருக்கு திருமணம் செய்து வைக்கிற நோக்கத்தில் இருப்பதையறிந்த கிருத்திகா, தன் காதலன் வினித்தை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற திட்டத்தில், சம்பவத்திற்கு மறுநாள் வீட்டில் தன் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வெளியேறி அருகிலுள்ள வினித்தின் வீட்டிற்குப் பதற்றத்துடன் வந்ததைக் கண்டு பதறிப்போன வினித்தின் பெற்றோர்களும் உறவினர்களும் கண்கலங்கியபடி வந்திருந்த கிருத்திகாவை அரவணைத்துப் பாசத்துடன் பாதுகாத்திருக்கிறார்கள். அதே வேளையில், கிருத்திகாவை வீட்டிலுள்ளவர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.
இதனிடையே தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி வினித்தின் வீடு சென்றது தந்தை நவீன் பட்டேலை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. அவரை அங்கிருந்து மீட்பதற்கான முயற்சியில் இருந்திருக்கிறாராம். இதனையறிந்த வினித் அவளுடன் வீட்டிலிருக்க வேண்டாம் என்ற திட்டத்தில் கிருத்திகாவுடன் பாதுகாப்பாக வெளியேறியவர் நவ. 27 அன்று நாகர்கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், முறைப்படி வினித்தும் கிருத்திகாவும் திருமணத்தை அங்குள்ள நோட்டரி பப்ளிக்கிடம் பதிவும் செய்திருக்கிறார்கள். அதையடுத்து மும்பை சென்ற வினித்தும் கிருத்திகாவும் அங்கிருந்து புனே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கிறார்கள். இதற்கிடையே நவீன் பட்டேலும் அவரது உறவினர்களும் இவர்களைத் தேடி வலை வீசியும் சிக்கவில்லையாம்.
இந்நிலையில், வெளியிடங்களில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த காதல் தம்பதியர் டிசம்பர் கடைசியில் ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஜன. 20 அன்று வினித்தின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர் நாட்டாமை உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் முன்னிலையில் வைத்து இந்து முறைப்படி வினித்திற்கும் கிருத்திகாவிற்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே கிருத்திகாவின் உடல்நலம் காரணமாக கிளினிக்கிற்கு தனது காரில் அவரை வினித் கூட்டிப் போயிருக்கிறார். இதனையறிந்த கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் இருவரும் வந்த காரை நிறுத்தியுள்ளனர். இதனால் பதட்டமான காதல் தம்பதியர் வேறு வழியில் தப்பி, ஆட்டோ ஒன்றில் தன் வீட்டிற்குப் போகாமல், குத்துக்கல்வலசையில் இருக்கும் தன் உறவினர் வீட்டிற்குப் போயிருக்கின்றனர். தன் மனைவி கிருத்திகாவுடன் அங்கேயே தங்கிய வினித், தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு ஆன்லைன் மூலமாக குற்றாலம் காவல்நிலையத்திற்குப் புகார் அனுப்பியவர், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் அனுப்பியிருக்கிறார்.
இந்தப் புகாரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கன்னா வினித், கிருத்திகாவை அழைத்த போது உடன் வினித்தின் உறவினரும் போயிருக்கிறார்கள். தன் மனைவி கிருத்திகாவின் கையைப் பிடித்தபடி உள்ளே வந்த வினித்தைப் பார்த்து சூடான இன்ஸ்பெக்டர், ‘அவ கையை விட்டுட்டு வாய்யா’ என்ற உடனேயே சந்தேகப்பட்டிருக்கிறார் வினித். கிருத்திகாவிடம் விசாரித்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கன்னாவிடம், தான் வினித்தை விரும்பி திருமணம் செய்து கொண்டதையும் அவருடன்தான் செல்வேன் என்றிருக்கிறார். ஆனாலும் கிருத்திகாவைப் பிரித்து, வந்திருந்த அவரின் பெற்றோரிடம் அனுப்பி வைக்கிற முயற்சியில் இருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால், அது முடியாமல் போயிருக்கிறது.
பின்னர், முதல்வரின் தனிப்பிரிவுக்குப் போன தம்பதியரின் புகார் மனு ஜன. 25 அன்று விசாரணைக்கு வரவே அது சமயம் பொறுப்பிலிருந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் விசாரணைக்கு வினித் தம்பதியரை வரவழைத்தவர், தனக்கு நெருக்கடி. அதனால் புகாரை வாபஸ் வாங்கும்படி வினித்திடம் இன்ஸ்பெக்டர் கெடுபிடி காட்ட, வினித் மறுத்திருக்கிறார். அதே நேரம், விசாரணைக்கு வராத கிருத்திகாவின் பெற்றோர், இரவு 7 மணிக்கு வருவதாகச் சொல்ல, காதல் தம்பதியர் வீடு திரும்பியிருக்கிறார்கள். வாய்ப்பிற்காக காத்திருந்த நவீன் பட்டேல், தன் உறவினர்கள் மற்றும் ரவுடிகளுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியேறிய காதல் தம்பதியரின் காரை நான்கு கார்களில் விரட்டியிருக்கிறார். இதனால் பயந்து போன வினித் தன் உறவினரின் குத்துக்கல்வலசை வீட்டிற்கு விரைந்திருக்கிறார்.
நவீன் பட்டேலும் அவரது குரூப்களும் வீடு புகுந்து அடித்து துவம்சம் செய்து விட்டு எதிர்த்த வினித்தையும் உறவினர்களையும் தாக்கியவர்கள், கிருத்திகாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். தன் மனைவி கடத்தப்பட்டதை தன் பெற்றோருடன் புகார் செய்ய குற்றாலம் காவல்நிலையம் சென்ற வினித் ஒரு நாள் முழுக்கப் பழியாய்க் கிடந்திருக்கிறார்கள். காவல் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லையாம். மறுநாள் இரவு வந்த டி.எஸ்.பி. மணிமாறனும், இந்தப் புகாரின் மீது எப்.ஐ.ஆர். போட முடியாது என்று சொல்லிவிட்டுப் போயுள்ளாராம். இந்நிலையில், நவீன் பட்டேலின் ஆட்கள் கிருத்திகாவைக் கடத்திய வீடியோ வைரலாகவே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரை அது போய், சம்பவம் சீரியசாகியிருக்கிறது. தென்காசி மாவட்டக் காவல்துறையின் மீதான தனது கடும் அதிருப்தியை டி.ஜி.பி. வெளிப்படுத்திய பிறகே நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. ஆனால், கிடைத்த அந்த இரண்டு நாள் கேப்பில், பட்டேலின் ஆட்கள் முடிந்தால் பிடித்துப் பார் எனச் சவால்விட்டபடி கிருத்திகாவுடன் தங்களின் ஜென்ம ஸ்தானமான குஜராத்தை அடைந்து விட்டதாம். எல்லாம் நடந்து முடிந்த பிறகே கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், டிரைவர் ராசு, உறவினர்களான விஷால், கிருத்தி பட்டேல், ராஜேஸ் பட்டேல், மைத்ரிக் பட்டேல் உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். ஆகியிருக்கிறது.
வினித் மற்றும் அவரது குடும்பத்தாரை நாம் சந்தித்த போது, நடந்தவற்றை விவரித்த வினித், “6 வருடமாக உயிராய் காதலித்தோம். திருமணம் செய்து இரண்டு மாதத்திற்கும் மேல் இணைந்து வாழ்ந்தோம். நான் தமிழன், அவர்கள் உயர் சாதியாம். அந்த ஆணவ வெறியில் என் மனைவியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று விட்டார்கள். கட்ச் பகுதிக்கே சென்றதாகத் தெரிகிறது. இப்ப வந்த வீடியோவுல கூட, எனது திருமணம் ஏற்கனவே மைத்ரிக் பட்டேலுடன் நடந்து, நான் அவருடனும் பெற்றோருடனும் இருக்கிறேன். எனக்கு யாரும் அழுத்தம், டார்ச்சர் செய்யவில்லை என்று பேசும் காட்சியும் படமும் வந்திருக்கு. அதுல கூட கிருத்திகா இயல்பா பேசுன மாதிரியில்ல. இங்கேயோ, போலீசின் ஆரம்ப விசாரணையிலோ கிருத்திகாவோ அவரது பெற்றோரோ ஏற்கனவே இந்த திருமணம் பற்றி எந்த இடத்திலும் சொல்லாமல் இப்போது தெரிவிப்பது ஆச்சரியமாயிருக்கு. அவ உயிருக்கு ஏதேனும் ஆயிடுமோன்னு தான் பயமாயிருக்கு” என்கிறார்.
இது குறித்து நாம் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சாம்சனிடம் பேசிய போது, “நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள், ஒரு ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படைகள் குஜராத் சென்றிருக்கிறது” என்றார். சமூகம் மாறித் திருமணமா என்ற ஆணவ ஆதிக்கத்திலிருக்கும் நவீன் பட்டேலின் தரப்பு தங்களின் நோக்கத்திற்காக எந்த எல்லையையும் தாண்டக்கூடியவர்களாம். குஜராத்தில் அவர்களின் கட்ச் மற்றும் காம்பே பகுதிகள் பள்ளத்தாக்குகளைக் கொண்ட வளைகுடா ஏரியாவாம். கடல் பகுதியான இதனையொட்டித் தான் பாகிஸ்தானின் எல்லை ஆரம்பமாகிறது. தப்பிப்பதற்காக அங்கேயும் பாயலாம் என்கிறார்கள் இவர்களைப் பற்றியறிந்தவர்கள்.
இதனிடையே பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட வினித், தன் மனைவி கிருத்திகாவை மீட்பதற்காக ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். நீதிமன்றமும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை போலீசார் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், கோட்டை விட்ட தென்காசி போலீசாரோ பெண்ணைக் கடத்திய குஜராத் பட்டேல் கோஷ்டியைப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
சூடு பிடிக்கும் குஜராத் பெண் கடத்தல் விவகாரம்; நீதிமன்றம் வந்த கிருத்திகா
ஜன. 25 அன்று கடத்தப்பட்ட வினித்தின் காதல் மனைவி கிருத்திகாவை ஆஜர்படுத்துமாறு வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்ததில் பிப். 07 அன்று கடத்தப்பட்ட கிருத்திகாவை நீதிமன்றத்தில் தென்காசி போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
வினித்தின் காதல் மனைவி கிருத்திகாவை வலுக்கட்டாயமாக குஜராத்திற்கு கடத்திச் சென்ற போது, தென்காசியின் இலஞ்சி, செங்கோட்டை பகுதியிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து போலீசுக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே எப்.ஐ.ஆர். போட இரண்டு நாட்கள் ஆனதாகவும் மீட்பு நடவடிக்கைகளும் தாமதமானதாகவும் அந்த கேப்பில் கிருத்திகாவின் பெற்றோர் அவரை கடத்திக் கொண்டு குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது.
இதன் பின் டி.ஜி.பி. தலையீட்டின் பேரில் தனிப்படைகள் கிருத்திகாவை மீட்க குஜராத் சென்றதில் திணறியிருக்கிறார்கள். 13 நாட்கள் கடந்தும் தனிப்படைகளால் மீட்க முடியாமல் போகவே நீதிமன்றக் கண்டனத்திற்கு ஆளாவோம். மேலும், தங்களுக்கு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் ஆகலாம் என்று பீதியாகிப் போன கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலின் தரப்புகள் போலீசின் பார்வையில் படாமல், கிருத்திகாவை தங்களது உறவினர்களின் வசம் ஒப்படைத்து பிப். 07 அன்று ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜர்படுத்தும்படி அனுப்பியிருக்கிறார்களாம்.
அதனையடுத்தே உறவினர்கள் பிப். 07 அன்று காலையில் நீதியரசர்களான சுந்தரமோகன், ஜெயச்சந்திரன் அமர்வில் கிருத்திகாவை ஆஜர்படுத்தியுள்ளனர். இங்கு வந்தால் தாங்கள் கைது செய்யப்படலாம் என்பதால் குற்றப்பட்டியலில் இருக்கும் கிருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்ட ஏழு பேரும் வரவில்லையாம். தவிப்பும் பதட்டமும் அழுகையுமாக கிருத்திகா காணப்பட்டாராம்.
நீதிமன்ற விசாரணையில் பெற்றோர் எங்கே எனக் கேட்டபோது, அவர்கள் வரவில்லை நாங்கள் உறவினர் தான் வந்திருக்கிறோம் என்று சொல்லப்பட்டதாம். நான் விரும்பித்தான் பெற்றோரோடு சென்றேன் என்று கிருத்திகா சொன்ன போது, நீதியரசர்கள் சில போட்டோக்களை கிருத்திகாவிடம் காட்டிப் பேசிய போது கிருத்திகாவின் பதில் முரண்பாடாக இருந்ததாம். மேலும், இங்கே வினித்தின் வீட்டில் இந்து முறைப்படி வினித், கிருத்திகா திருமணம் நடந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் கிருத்திகாவிடம் காட்டிய நீதியரசர்கள், அது பற்றியும் அவரிடம் கேட்டிருக்கிறார்களாம். மைத்ரிக்குடன் திருமணம் நடந்தது என்றால் ஏன் வினித்தை திருணம் செய்ய வேண்டும். இதன் பின் ஏன் குஜராத் செல்ல வேண்டும். இதில் முரண்பாடு உள்ளது. அக்டோபரில் இங்கு திருமணம், ஜனவரி 31ல் அங்கே திருமணம் என, மைத்ரிக் பட்டேலுடன் நடந்த திருமணத்திற்கான புகைப்படங்களை நீதிமன்றம் கேட்டபோது, உடன் வந்தவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லையாம். குஜராத்தில் திருமணம் செய்த மைத்ரிக் பட்டேலை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேட்டபோது, அவர் தலைமறைவாகி விட்டார் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
கிருத்திகா கடத்தப்பட்டதில் தனிப்பட்ட செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு காவல் பலப்படுத்தப்பட வேண்டும். தென்காசி பெண்கள் காப்பகத்தில் கிருத்திகா ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் தீவிரப்படுத்தப்பட வேண்டும். கிருத்திகாவைச் சந்திக்க இரண்டு தரப்புகளும் அனுமதிக்கப்படக் கூடாது என்று தென்காசி டி.எஸ்.பி.க்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். கிருத்திகா பதட்டத்திலிருக்கிறார். நார்மல் கண்டிசனுக்கு வரணும். காப்பகத்தில் வைத்து அவரிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும் அதனுடன் கிருத்திகாவை பிப். 13 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்பு வினித் கிருத்திகா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.