அண்மையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைப் பகுதியான தென்காசியின் சில பகுதிகளில் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் கேரளாவிலிருந்து வந்த அதிகாரிகள் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் இதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து மருத்துவக் கழிவுகள் திருப்பூர் பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து தடுத்து நிறுத்தினார்.
இது தொடர்பாக போலீசாருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கேரளாவை சேர்ந்த புரோக்கர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு தன்னுடைய சொந்த தோட்டத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்ட அனுமதித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகளை எரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தி, தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மொத்த மருத்துவக் கழிவுகளையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கழிவுகளைக் கொண்டு வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.