ஆணவ கொலை என்பது தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அதற்கான தண்டனைகளும் காலம் கடந்தே தான் கிடைக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் நடந்த ஒரு ஆணவ கொலை அந்த மாநிலத்தையே உலுக்கியதோடு ஒரே ஆண்டில் கொலையாளிகளுக்கு தண்டனையும் கிடைத்துள்ளது.

கோட்டயம் அருகேயுள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கெவின்(24) தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த பத்தனம்திட்டாவை சேர்ந்த சாக்கோ ஜான் என்பவரின் மகள் மீனுவை காதலித்து வந்தார். கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அவர்களுடைய காதல் தொடர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து அவர்களுடைய காதலை மெருகேற்றினார்கள்.
இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் மீனுவின் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கெவினையும் மிரட்டியுள்ளனார். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 2018 மே மாதம் மீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மனைவி மீனுவின் கண்முன்னே கெவினை காரில் கடத்தி சென்றனர். உடனே மீனு போலிசில் புகார் கொடுத்தார். போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் மறுநாள் கெவினின் உடல் தென்மலை அருகே சாலியான் ஆற்றில் மிதந்தது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு காதலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. (இதை அப்போது நக்கீரன் இணையமும் விரிவாக பதிவு செய்திருந்தது) இதில் மீனுவின் தந்தை சகோதரன் உறவினர்கள் மற்றும் சகோதரனின் நண்பர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆணவ கொலை வழக்கு கோட்டயம் மாவட்ட முதன்மை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 23-ம் தேதி நீதிமன்றம் மீனுவின் தந்தை உட்பட 4 பேரை விடுவித்து சகோதரன் உட்பட 10 பேரை ஆணவ கொலை வழக்கு குற்றவாளியாக அறிவித்தது. அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் அத்தனை பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.