மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- "2000- ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் 9 முறை புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது அமைச்சர்கள் பார்வையிடுவதும், நிவாரண உதவி வழங்குவதுமாக மட்டுமே இருக்கிறது. எனவே, தொலைநோக்கு பார்வையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும். பெய்யும் மழையை சேமிக்க கொள்ளிடத்தில் 7 கதவணைகள் அமைக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ஒரு கதவணை அமைக்க நடவடிக்கை எடுத்தார். மற்ற கதவணைகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1.65 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 0.852 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. எனவே, வீராணம் உள்பட எல்லா ஏரிகளையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிரை பார்ப்பதற்கு பச்சை பசேலென தெரிந்தாலும் விளைந்தால் அவை பதராகத் தான் இருக்கும். எனவே, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரமும், வாழைக்கு ரூபாய் 50 ஆயிரமும், ஒவ்வொரு பயிருக்கும் உரிய இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.
வறட்சி, புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. பின்னர் எதற்காக மத்தியக் குழுவினை அரசு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இடிந்தால் மட்டும் நிவாரணம் என்று சொல்லக் கூடாது.
சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவசாயிகளை பாதிக்கும். இதேபோன்று சென்னை- திருவள்ளூர்- பெங்களூர் சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். விவசாயத்தை அழித்து விட்டு வளர்ச்சி தேவைப்படுகிறதா? ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்து விட்டு பெரிய அளவிலான நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லலாம்.
அதேநேரத்தில் இதேப் போன்ற சட்டத்தை தமிழகத்திலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளனர். மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற்றாலும் தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் நலனை அ.தி.மு.க கண்டுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன? ஜாதி வாரியான புள்ளி விபரங்கள் வேண்டுமெனில் மத்திய அரசு 2011- ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களை கோரி பெற்றுக் கொள்ளலாமே" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், நிர்வாகிகள் மு.மருதவாணன், பி.கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.