ஓஎன்ஜிசி விவகாரத்தால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த கதிராமங்கலம் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழாவையொட்டி, அங்குள்ள பள்ளியிலும், கடைவீதியிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம்,என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பார்வையை இழுத்திருக்கிறார்கள் பந்தநல்லூர் காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி காவல் நிலையம் பந்தநல்லூர். அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமமே கதிராமங்கலம். இரண்டு வருடங்களாக ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பினால் வழக்கு, கைது, போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அப்பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் ஒருவித கருத்து முரண்பாடு இருந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி வரும் டெங்குகாய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும் பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா உள்ளிட்ட காவலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமமான மொழையூர் அரசு பள்ளியிலும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர். அதனை தொடரந்து கதிராமங்கலம் கடைவீதியில் தலைக்கவசம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள், அங்குள்ள அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்துல்கலாம் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், தலைக்கவசத்தின் அவசியம், போஸ்கோ சட்டம் உள்ளிட்டவற்றை பற்றி விளக்கி பேசினர்.
விழாவில் பேசிய இன்ஸ்பெக்டர் சுகுணாவோ, "ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நமது அய்யா மறைந்த அப்துல்கலாமை போல சாதனையாளர்களாக வர வேண்டும், கனவு காணுங்க, நீங்கள் ஒவ்வொரு வரும் ஒரு அப்துல்கலாம் தான்" என்று பேசியவர் டெங்கு காய்சலை ஒழிக்க அரசு நினைத்தால் மட்டும் ஒழித்து விட முடியாது, மாணவர்களாகிய நீங்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் நினைத்து சுகாதாரத்தை பேனிக்காக்கவேண்டும். தலைக்கவசம் நமது உயிருக்கான கவசம். அதோடு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருமரம் கட்டாயம் வளர்க்க வேண்டும். மரம்தான் இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும்" என்று பேசிமுடித்தார். அதன் பிறகு அந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளோடு மரக்கன்றுகளை நட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.