Skip to main content

சேலம் ஸ்மார்ட் சிட்டிக்கு நிதி ரூபாய் 117 கோடி வந்தது! ஏரியை தூர்வார நிதியில்லை!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

சேலம் மாநகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்று அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி. ஆனால் இந்த ஏரி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரபடாமல் உள்ளது. இது குறித்து தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதினோம். இந்த கடிதம் சேலம் மாநகராட்சிக்கு சம்பந்தப்பட்டது என்பதால் சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்பி சமந்தப்பட்ட மனு தாரருக்கு உரிய பதிலை உடனடியாக அனுப்புமாறு முதல்வரின் தனிப்பிரவு சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் 12/11/2018 அன்று அளித்துள்ள பதிலில் "சேலம் சிட்டிசன் போரம்" என்ற அமைப்பிற்கு ஏரியை தூரவாரும் பணியை ஒதுக்கீடு செய்து தூர்வாரப்பட்டுள்ளது எனவும் , தற்போது ஏரியின் முழு பரப்பளவில் பாதியளவு தண்ணீர் தேங்கியுள்ளது என்றும், மேலும் இக்குமரகிரி ஏரி முழுமையான அளவில் துர்வாரி பொழுது போக்கு பூங்காவாக மாற்றிட "சேலம் ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் மூலம் மேற்கண்ட பணி எடுக்கப்பட்டு திட்ட பிரேரணைகள் தயார் செய்யப்பட்டு உரிய அனுமதிகள் பெற நடவடிக்கையில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது என்று ஆணையாளர் அவர்கள் பதிலளித்துள்ளார். 

salem lake

சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் பதிலளித்து சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் , இக்குமரகிரி ஏரியை தூர்வார எந்த டெண்டரும் விடப்படவில்லை. மேலும் ஏரியை தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . "சேலம் ஸ்மார்ட் சிட்டி" க்கு தொடர்பாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதா? என்பது தொடர்பாக "தகவல் அறியும் உரிமை" சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினோம். இதற்கு பதிலளித்துள்ள தகவல் தொடர்பு ஆணையம் சேலம் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சுமார் 100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது எனவும், இந்த நிதியை தமிழக அரசுக்கு ஏற்கெனவே விடுவித்துள்ளதாகவும் நமக்கு தெரிவித்தது. ஆனால் ஸ்மார்ட் சிட்டிக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கிய போதும் அந்த நிதியை ஏரியை தூர்வார பயன்படுத்தாமல் கால  தாமதம் செய்கிறது சேலம் மாநகராட்சி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து மக்களிடம் கேட்கும் போது ஒவ்வொரு முறை வாக்கு கேட்கும் போதும் அதிமுக வேட்பாளர்கள் குமரகிரி ஏரியை தூர்வாரப்படுவதாக உறுதியளித்தார்கள். ஆனால் கடந்த 10 வருடத்திற்கு மேல் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. 

salem lake

இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக A.B.சக்திவேல் MLA அவர்கள் உள்ளார். இவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டியுள்ளனர். எப்போது தான் குமரகிரி ஏரி பூங்காவாக பார்க்க முடியும் என மக்கள்  நம்மிடம கூறுகிறார்கள்.  எனவே சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாநகராட்சி விரைவில் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பி . சந்தோஷ் , சேலம் 

 

சார்ந்த செய்திகள்