கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக, தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கறுப்பர் கூட்டதைச் சேர்ந்த செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டும், வீடியோவில் பேசியிருந்த நாத்திகன் என்ற சுரேந்திரன் சரணடைந்தும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்தவரும், ஸ்டுடியோவை வாடகைக்கு அளித்தவருமான கார்த்திக் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளிலிருந்து கறுப்பர் கூட்டம் சேனலுக்கு பணம் வருவதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், முன்ஜாமீன் வழங்க காவல்துறை ஆட்சேபனை தெரிவித்தது.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.