பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களை, ஓசூரைச் சேர்ந்த 3M இண்டியா பிரைவேட் லிமிடெட், மற்றும் ஷிப்பி ரீட்டைல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடம் பெற்று, அந்நிறுவனத்திடம் இருந்துதான் சான்று பெற வேண்டும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது என்பதால், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையர், 3M இண்டியா பி., லிமிடெட், மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் பி., லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், நவம்பர் 26- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.